Photo: Facebook/ ManoGanesan
பாராளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மை சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட உறுப்பினர்களை கொண்ட விசேட குழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சபைக்குள் நேற்று ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஏட்டிக்குப் போட்டியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன்பின்னர் எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் சபைக்கு வெளியே ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரை தாக்குவதற்கு முயற்சித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் முறையிட்ட சபை முதல்வர் தினேஸ் குணவர்தன, இது குறித்து உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதன்போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தமது கருத்துக்களை முன்வைத்து, இவ்வாறான சம்பவங்களால் பாராளுமன்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள மதிப்பும் இல்லாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
இந்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்திய சபாநாயகர், 7 பேர் கொண்ட சிரேஷ்ட எம்.பிக்களை உள்ளடக்கிய விசேட குழுவை அமைத்து, அதன்படி சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாக நடவடிக்கையெடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.