July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இரண்டு மாதங்களின் பின்னர் அதிகளவான கொரோனா நோயாளர்கள் பதிவு

இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் நேற்று பதிவாகியுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளான 516 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இலங்கையில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொரோனா தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

புத்தாண்டைத் தொடர்ந்து கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒன்றுகூடல்கள், கழியாட்டல்களை சுகாதார அமைச்சு தடை செய்துள்ளது.

இலங்கையில் இந்நிலை தொடர்ந்தால் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டி வரும் என்றும் மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இதேநேரம், இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் தாம் விஞ்ஞான ரீதியான தகவல்களைத் திரட்டி வருவதாகவும் சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 11 பேர் உட்பட வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 788 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 21 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரையில் 97,988 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்களில் 93,668 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

மேலும், 630 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.