திட்டமிட்டபடி இந்த ஆண்டும் மே தின பேரணியை நடத்தவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி ( ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதில் கலந்து கொண்டு பேசிய ஜே.வி.பி.யின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க இந்த முடிவை உறுதிப்படுத்தினார்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள்,பேரணிகள், ஒன்றுகூடல்கள் என கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளில் சுகாதார வழிகாட்டுதல்களை பற்றி கவனம் செலுத்தாத அரசாங்கம், மே தின பேரணிகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளமைக்கு பின்னால் ஒரு அரசியல் நோக்கம் உள்ளது என்பது தெளிவாகிறது.
தனது அரசியல் நோக்கத்திற்காக அரசாங்கம் மே தின பேரணிகளை நிறுத்தி வைக்க முடிவெடுத்தாலும்,அந்த முடிவுக்கு ஜே.வி.பி. கட்டுப்படாது.
அந்த அடிப்படையில்,மே தின பேரணியை நடத்துவதற்கு ஜே.வி.பி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் அனுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.