அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையத் தவறிய அரச நிறுவனங்கள் தொடர்பான அறிக்கையை திரட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர்களுக்கு பணித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
“அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு போதுமான சேவைகளை வழங்கவில்லை” என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது முக்கிய விடயம் எனவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.
நிர்ணயித்த இலக்குகளை அடையத் தவறிய அரச நிறுவனங்களுக்கு தேவைப்பட்டால் புதிய அதிகாரிகளை நியமிக்க தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தேவையற்ற பிரச்சினைகள் காரணமாக அதிகமான அரச நிறுவனங்களைத் திறமையற்றவையாக பொது மக்கள் கருதுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டுக் கடன்களின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மறு ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.