உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக குரல் எழுப்பி வரும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, யுத்தத்தால் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளுக்காகவும் குரலை உயர்த்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சபையில் தெரிவித்தார்.
பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துமாறு ஒருநாள்கூட கூறியிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் இளைஞர்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுமளவுக்கு நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக கைதுகள் தலை தூக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கைக்கு அமைய மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்காக நாமும் சபையில் அஞ்சலி செலுத்துகிறோம். தமிழர்கள் இந்த மண்ணில் கடந்த 70 ஆண்டுகளாக கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுள்ளனர்
இறுதி யுத்தத்தில், இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்காக தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர். கஞ்சிக்காகவும் சோற்றுக்காகவும் வரிசையில் நின்ற பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டனர். ஐ.நாவின் அங்கத்துவ நிறுவனங்கள் கலைக்கப்பட்டன.
இவ்வாறு பாரிய அநியாயங்கள் இடம்பெற்ற போது கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை. யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துமாறு ஒருநாள்கூட கூறியிருக்கவில்லை.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக இன்றும் கூட பல தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் நீர்வேலி, கோப்பாய், கள்ளியங்காடு போன்ற பகுதிகளிலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் பல இளைஞர்கள் ஒரே இரவில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் எங்கே இருக்கின்றனர் என்றும் எவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் தெரியாதுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தினூடாக அடக்கு முறையும் மலிந்து போயுள்ளது. ஊடக சுதந்திரம் இல்லாத நாடாக இலங்கை மாறிக்கொண்டுள்ளது. ஊடகவியலாளர்கள் எவரும் தொடர்புகளை வைத்திருந்தால் அவர்கள் நான்காம் மாடிக்கு அழைக்கப்படுகின்றனர் எனவும் சிறீதரன் எம்.பி சுட்டிக்காட்டினார்.