November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கதிரியக்கப் பொருட்களுடன் வந்துள்ள சீன கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவு

file photo: Facebook/ Hambantota International Port, Sri Lanka

கதிரியக்க மூலப்பொருட்களுடன் ஹம்பாந்தோட்டைக்கு வந்த சீன கப்பலை துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக குறித்த கப்பல் நேற்று இரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வந்துள்ளதாக தெரியவருகின்றது.

அணு உற்பத்திக்குப் பயன்படும் மூலப்பொருட்களுடன் கூடிய கப்பல் சீனாவுக்குத் திரும்பும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துறைமுகத்துக்குள் வந்துள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கப்பலில் அணு உற்பத்தியுடன் தொடர்புடைய மூலப்பொருள்கள் இருந்தமை துறைமுக அதிகாரசபைக்குத் தெரியாது என்றும் அணுசக்தி அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கப்பலில் இருந்து எந்தப் பொருட்களையும் வெளியேற்ற வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கப்பலில் இருந்து வெளியிடப்படும் கழிவுப் பொருட்களில் இருந்து இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று அணுசக்தி அதிகாரசபையின் தலைவர் ஆர். தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அணு மூலப்பொருட்களுடன் தொடர்புடைய சர்வதேச கப்பலொன்று வந்துள்ளமை உண்மையா? என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சர்வதேச கப்பலொன்று இரசாயன அணு மூலப்பொருட்களுடன் நுழைந்துள்ளதை இலங்கை அணுசக்தி அதிகாரசபை கண்டறிந்துள்ள நிலையில், அரசாங்கம் மௌனம் காப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

குறித்த கப்பலை இலங்கை கடற்படைக்கு பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.