சீன தூதரகத்தின் துறைமுக நகர் விஜயத்திற்கான அழைப்பு குறித்து எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கொழும்பு துறைமுக நகர் கற்கை விஜயம் ஒன்றினை சீன தூதரகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஏப்ரல் 22 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் முடிவுக்கு வந்த பின்னர் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சீன தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், இலங்கையின் நிலப்பரப்பை பார்வையிட சீன தூதரகம் எவ்வாறு அழைப்பு விடுக்க முடியும் எனவும் இதன் போது, எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா சபையில் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து பாராளுமன்றத்தில் இருந்து உறுப்பினர்களின் தொலைபேசிக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷன ராஜகருணா குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் எமது ஆட்சியிலும் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட போதும் அதனை நகர அபிவிருத்தி அதிகாரசபையே ஏற்பாடு செய்திருந்தது என்றார்.
இதனை கைவிடுமாறு அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்த வேளையில், குறித்த குறுஞ்செய்தி தொடர்பில் தான் ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.