நாட்டின் பல பகுதிகளில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு, பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக வீதிகளில் தனியாக பயணிக்கும் பெண்களை வழி மறித்து தங்கச் சங்கிலிகளை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 24 மணி நேரத்தில் யக்கல, வெல்லாவ, வலஸ்முல்ல மற்றும் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறான குற்றச் செயல்களில் இரண்டு நபர்கள் இணைந்து மோட்டார் சைக்கிள்களின் உதவியுடன் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சன நடமாட்டம் குறைந்த மற்றும் இருள் அடைந்த வீதிகளை தெரிவு செய்து தனிமையில் நடந்து செல்லும் பெண்களின் தங்க சங்கிலிகளை பறித்துக்கொண்டு இவர்கள் தப்பி விடுவதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று வாரங்களில் சங்கிலி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 13 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பல்வேறு திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.