November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு சட்ட நடவடிக்கை’: பாராளுமன்றில் பிரதமர் உறுதி

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இன்றும் பல்வேறு பொய்களை மக்கள் மயப்படுத்தி, விசாரணைகளுக்கு அழுத்தங்கள் கொடுத்து சமூகத்தின் பார்வையை வேறு திசைக்கு திருப்பும் நோக்கில் செயற்பட்டு வருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் மேற்கொண்ட விசேட அறிவிப்பின் போதே, இவ்வாறு கூறியுள்ளார்.

தாக்குதலுடன் தொடர்புபட்ட சகலருக்கும் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தின ஆராதனையில் பங்குபற்றியிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை மிகவும் கவலையுடன் நினைவுகூர்ந்து, உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஏனைய சாட்சியங்கள் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட தாம் தயாரில்லை என்றாலும், இந்த விடயத்தில் நீதியை பெற்றுக்கொடுக்க ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு அப்பால் இடம்பெறும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகள் மற்றும் ஏனைய விசாரணைகளை எவ்வித தடைகளுமின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி செய்து கொடுத்துள்ளதாகவும், விசாரணைகள் முடிவடைந்த பின்னர் உரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.