இலங்கையில் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி பாவனை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தடுப்பூசி பாவனையால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளிக்கும் போதே, சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தடுப்பூசி வழங்கியதால் குருதி உறைந்த 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருதி உறைதலுக்கும் தடுப்பூசி பாவனைக்கும் இடையே நேரடி தொடர்பு இல்லை என்பதே உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிலைப்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அஸ்ட்ரா செனிகா மட்டுமன்றி, எந்தவொரு தடுப்பூசியாலும் பக்க விளைவுகள் ஏற்படலாம்.
அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி வழங்கி சில வாரங்களில் இரத்தம் உறைந்த சம்பவங்கள் வெளிநாடுகளில் பதிவாகியுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் ஒரு மில்லியன் தடுப்பூசிகளுக்கு 4 முதல் 6 வரை பதிவாகலாம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை தொடர்ந்தும் பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதித்துள்ளது”
என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.