File Photo
அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினருக்கிடையே ஏற்பட்ட சர்ச்சை நிலைமையை தொடந்து பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதுடன், சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள் சமர்ப்பணம் மற்றும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் ஒழுங்குப் பிரச்சனையை முன்வைத்த எதிர்க்கட்சியினர் அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் தொடர்பாக சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினர்.
நாளை நடைபெறவுள்ள குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சியினரே முதலில் உரையாற்ற வேண்டுமென்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.
இதற்கு இடமளிக்க முடியாது என்று ஆளும் கட்சியினர் தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சியினர் சபையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது அங்கு அமைதியின்மை ஏற்பட்ட நிலையில் சபை நடவடிக்கைகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.