January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கரோலைன் ஜூரியின் திருமதி உலக அழகிப் பட்டம் கைமாறுகிறது

2020 திருமதி உலக அழகியாக மகுடம் சூடிய கரோலைன் ஜூரி, தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை கையளித்துள்ளதாக திருமதி உலக அழகி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, 2020 திருமதி உலக அழகிப்போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட, அயர்லாந்தைச் சேர்ந்த கேட் ஷைண்டர் 2020 உலக அழகு ராணியாக மகுடம் சூட்டப்படவுள்ளார்.

இது தொடர்பில் திருமதி உலக அழகிப் போட்டி அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில்,

தானாக முன்வந்து மேற்கொண்டுள்ள அவரது இராஜினாமா முடிவானது, முற்றிலும் அவரது சொந்த முடிவு என  தெரிவித்துள்ளது.

கரோலைன் ஜூரி மற்றும் அவரது குடும்பத்தினர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துவதாக, திருமதி உலக அழகிப் போட்டி அமைப்பு விடுத்துள்ள குறித்த ஊடக வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், குறித்த போட்டியில் இரண்டாம் இடத்திற்கு தெரிவான அயர்லாந்தின்
கேட் ஷைண்டர் (Kate Schneider) புதிய 2020 திருமதி அழகியாக தெரிவாகியுள்ளதாக அவ்வமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி இடம்பெற்ற 2021 திருமதி ஸ்ரீலங்கா அழகிப் போட்டியின் முடிவில் இடம்பெற்ற குழப்பநிலை காரணமாக கரோலைன் ஜூரி தனது திருமதி உலக அழகிப் பட்டத்தை கைவிட முடிவு செய்வதாக அறிவித்திருந்தார்.

இதனையடுத்தே திருமதி உலக அழகி அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, திருமதி ஸ்ரீலங்கா அழகிப் போட்டியின் போது இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில், திருமதி ஸ்ரீலங்கா அழகியாக முடிசூட்டப்பட்ட புஷ்பிகா டி சில்வாவுடனான முறுகல் நிலை சுமுகமாக முடிவுக்கு வராத நிலையில், அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் திருமதி உலக அழகி கரோலைன் ஜூரி மற்றும் விளம்பர நடிகை சூலா பத்மேந்திர ஆகிய இருவரும் தலா ரூ. 100,000 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.