விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், அந்த அமைப்பின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாக செயற்பட்டவர் என்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அப்பாவிகள் அல்ல என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இராணுவம் கொலை செய்ததாக தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு வெளியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ‘பிரபாகரனின் குடும்பத்தில் அனைவருமே பயங்கரவாதிகள்’ என்று கூறினார்.
பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுக்கு உணவு, தண்ணீர் கொடுத்துவிட்டு அந்தச் சிறுவனை இராணுவம் சுட்டுக் கொன்றதாக கஜேந்திரன் எம்.பி கூறிய தகவல் பொய்யானது என்று பொன்சேகா தெரிவித்தார்.
“பிரபாகரன் என்ற பயங்கரவாத தலைவன் புலிகளை வழிநடத்தினார். அவரது மனைவி புலிகளின் விநியோகப் பிரிவிற்கு பொறுப்பானவராக இருந்தார். அவரது மூத்த மகன் பயங்கரவாத அமைப்பின் கேர்ணலாக இருந்தார். அவரது மகள் பயங்கரவாதிகளின் பெண்கள் அமைப்பின் மேஜராக இருந்தார்” என்றார் பொன்சேகா.
“இவர்கள் கூறும் பாலச்சந்திரன் என்ற சிறுவனும் பயங்கரவாதிகளின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாக செயற்பட்டார். இவர்கள் யாரும் அப்பாவிகள் அல்ல” என்று சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாலச்சந்திரனின் கடைசி நிழற்படத்தில் அவர் பதுங்கு குழி ஒன்றில் இருப்பதையும் தமிழர்கள் அணியும் சாரம் ஒன்றினை அணிந்திருந்ததையும் காணமுடிவதாகவும், இராணுவத்தின் கையில் சிக்கியிருந்தால் அவருக்கு சேர்ட், கால்சட்டை அணிவிக்கப்பட்டிருக்கும் எனவும் பாராளுமன்றத்தில் கூறினார் முன்னாள் இராணுவத் தளபதி.
ஆவேசத்துடன் பேசிய பொன்சேகா, குறித்த படத்தில் பாலச்சந்திரனுக்கு அருகில் நின்றுகொண்டிருக்கும் நபர் அணிந்துள்ள சீருடை விடுதலைப் புலிகள் மட்டுமே பயன்படுத்திய உடை எனவும் கூறினார்.
“இராணுவத்தின் மீது அனாவசியமாக பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சபையில் பேச வேண்டாம்” எனவும் பொன்சேகா கஜேந்திரன் எம்.பியை நோக்கி தெரிவித்தார்.
இதனிடையே, இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பாலச்சந்திரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முன்னர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.