January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியே மே தின நிகழ்வுகள் தடைக்கு காரணம் என்கிறது ஜே.வி.பி.

மே தின பேரணியை அரசாங்கம் நடத்தமுடியாத நெருக்கடியில் இருப்பதனால் தான் மே தின நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)தெரிவித்துள்ளது.

“அரசாங்கத்துக்குள் இன்று மோதல் வலுப்பெற்றுள்ளது.அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் எந்த அரசியல் மேடையில் ஏறுவது என்பதில் குழப்பமடைந்துள்ளனர்” என்றும் ஜே.வி.பி.இன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

மே 01 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மே தின நிகழ்வுகளை நிறுத்துவதென எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு நாங்கள் இணங்கவில்லை.

சுகாதார நடைமுறைகளை கவனத்தில் எடுத்து மே தினத்தை நடத்தவிடாமல் தடுப்பதாக தீர்மானம் எடுப்பதாயின் ,சுகாதார விதிமுறைகளை கவனத்தில் கொள்ளாத பல நிகழ்வுகள் கடந்த காலங்களின் நாட்டில் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட கிராமத்துடன் கலந்துரையாடல் என்ற தொடர் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதேபோல்,சிங்கள-தமிழ் புதுவருட காலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடினார்கள்.அப்போது இடம்பெறாத காரணத்தை தற்பொழுது உருவாக்கி அதனை முன்கொண்டு செல்ல அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இதன் மூலமாக அரசாங்கத்துக்குள் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி காரணமாக,அரசாங்கத்தால் மே தின பேரணியை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது எனறும் அவர் மேலும் தெரிவித்தார்.