சஹரானின் மடிக்கணினியையும், பிரதான சாட்சியங்களையும் நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் அழித்துவிட்டதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா பாராளுமன்றில் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் சஹரானின் மடிக்கணினி காணாமல் போயுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் தனது இறுதி ஆறுமாத காலத்தில் தாக்குதலுடன் தொடர்புபட்ட சாட்சியங்கள் அனைத்தையும் அழித்துவிட்டது.
ஈஸ்டர் தாக்குதல் நடத்திய பிரதான சூத்திரதாரி ஒருவர் இருப்பார் என்றால் அவரை நிச்சயமாக கண்டறிய நடவடிக்கை எடுப்போம். அதேபோல் மத்திய வங்கி ஊழல்வாதிகளுக்கும் விரைவில் தண்டனை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு ஹரின் பெர்னாண்டோ பிரதானமாக பொறுப்புக்கூறியாக வேண்டும்.ஏனென்றால் இது குறித்து முன்பே தெரிந்துகொண்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவே ஆவார்.
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதற்கும் மக்கள் கொல்லப்படுவதற்கும் இடமளித்தவர்கள் இன்று தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கைது செய்யவில்லையா என கேட்கின்றனர்.
மத்திய வங்கியை கொள்ளையடிக்க அனுமதித்து, குற்றவாளியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு மத்திய வங்கி ஊழலின் பிரதான குற்றவாளியை கைது செய்யவில்லையா? என எம்மிடம் கேட்கின்றனர்.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற நாளிலிருந்து நாம் ஆட்சிக்கு வரும் வரையில் ஆட்சியில் இருந்தவர்கள் ஏன் அன்றே பிரதான சூத்திரதாரியை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்று சபையில் கூறும் காரணிகளை ஏன் அன்றே கண்டறியவில்லை. ஐ.பி முகவரியில் கண்டறிய முடியும் என இன்று கூறும் நீங்கள் ஏன் அன்றே இதனை செய்யவில்லை.
கத்தோலிக்க மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம்.கத்தோலிக்கர்கள் இறந்த நேரத்தில் கறுப்பு சால்வை அணியாத ஹரின் பெர்னாண்டோ, இன்று ரஞ்சன் ராமநாயகவிற்காக கறுப்பு சால்வை அணிகின்றார். இது உண்மையான கத்தோலிக்கர் செய்யும் செயல் அல்ல என்று அவர் மேலும் தெரிவித்தார்.