முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 கிராமங்களை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையகப்படுத்தும் நடவடிக்கையை அமைச்சர் சமல் ராஜபக்ஷ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழான 5 ஒழுங்கு விதிகள் மற்றும் மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
‘அமைச்சர் சமல் ராஜபக்ஷ 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது அமைச்சில் எமது கோரிக்கைக்கு அமைவாக மகாவலி தொடர்பாக ஒரு கூட்டத்தை நடத்தினார்.
13 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அமைச்சருக்கு ஒரு கோரிக்கை கடிதத்தை முன்வைத்திருந்தனர்.
அந்த கடிதத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் இருக்கின்ற கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு , கருநாட்டுக்கேணி, கொக்குத் தொடுவாய் மேற்கு ,கொக்குத்தொடுவாய் மத்தி, செம்மலை கிழக்கு போன்ற 6 கிராம அலுவலர் பிரிவுகளை பிரதேச செயலக நிர்வாகத்திலிருந்து மகாவலி அதிகார சபைக்கு எடுக்கின்ற முயற்சியை நிறுத்துமாறு கேட்டிருந்தோம்.
அப்போது அமைச்சர் சமல் ராஜபக்ஷ , ‘முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வந்து ஒரு நியாயமான தீர்வை தரும் மட்டும் இந்த விடயம் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க வேண்டா’மென மகாவலி அதிகாரசபை பணிப்பாளருக்கு அறிவுறுத்தினார்.
இன்று வரை அமைச்சர் சமல் ராஜபக்ஷ முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வரவில்லை. ஆனால் அதே செயற்பாடு இன்று நடைபெறுகின்றது. மகாவலி அதிகாரசபை தொடர்பில் அவருடன் பல தடவைகள் பேசியுள்ளேன்.
மேலும், 25 மாவட்டங்களின் அரச அதிபர்களுக்கும் பொறுப்பானவரான சமல் ராஜபக்ஷ கூறிய விடயத்தையே நடைமுறைப்படுத்தாமல் இந்த அரசு உள்ளது.
எனவே இந்த 6 கிராம சேவகர் பிரிவுகளை மகாவலி அதிகாரசபை எடுக்கும் விடயத்தை அமைச்சர் சமல் ராஜபக்ஷ உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.