அரசாங்கத்தின் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர ஆகிய இருவருக்கும் எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
23 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மக்கள் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக தெரிவித்து நுகெகொட நாலந்தாராம விகாராதிபதி தீனியாவல பாலித்த தேரரினால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல, மத்திய வங்கியின் ஆளுநர், பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கின் மனுதாரரான தீனியாவல பாலித்த தேரர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;
6.5 பில்லியன் டொலர்களை அஜித் நிவாட் கப்ரால் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார். அதேபோல, அமெரிக்காவின் இமாட் சுபேரி எனப்படுகின்ற CIA உறுப்பினருக்கு அந்தப் பணத்தை வழங்கியுள்ளார்.
இவ்வாறு பணத்தை பெற்றுக்கொண்ட சுபேரிக்கு தற்போது அந்தநாட்டில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பணத்தை கொடுத்தவர் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் சென்று நிதி இராஜாங்க அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டு வாழ்ந்து வருகின்றார். அது தொடர்பில் எமக்கு எந்தவித குரோதமும் இல்லை.
அரசியலமைப்பின் 150 ஆவது சரத்துக்கு அமைய இது மிகப் பெரிய குற்றமாகும். ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பணத்தை விடுவிப்பது தொடர்பிலேயே 150 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஜிட் நிவாட் கப்ராலுடன் தொடர்புடைய கடந்த கால ஊழல், மோசடிகள் பல உள்ளன. ஹெஜிங் கொடுக்கல் வாங்கல் மூலம் 10.2 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, 2005 ஆம் ஆண்டு முதல் 2015 வரை 10 பில்லியன் ரூபா மத்திய வங்கி முறிகள் மோசடியிலும், கிரேக்க முறிகள் மோசடிகள் மூலம் 2.1 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மக்களின் பணத்தை அஜிட் நிவாட் கப்ரால் சூறையாடியுள்ளார்.
எனவே, ஊழல், மோசடி, பொதுச் சொத்துக்களை தவறாக கையாண்டமை தொடர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர்
பி.பீ ஜயசுந்தர ஆகிய இருவரையும் சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் என்றடிப்படையில் இந்தப் பணத்தை மீண்டும் அறவிடுவதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு இவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யுமாறும் சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்குமாறும் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.