உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்கள் நால்வர் உட்பட அதிகமான அதிகாரிகள் இடமாற்றப்பட்டது ஏன்? என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் மீதான பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போது, ஹரின் பெர்னாண்டோ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
விசாரணை நடத்தியவர்களைக் கைது செய்து சிறையில் போட்டும், விசாரணை நடத்திய அதிகாரிகளை இடமாற்றியும் இந்த அரசாங்கம் எதனை மூடி மறைக்க முனைகிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளின் பின்னணியில் ஒரு புலனாய்வுத்துறை அதிகாரியைக் கைது செய்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் போது, இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இது எங்களின் விடயம் என்று கூறி அவரை அழைத்துச் சென்றதாகவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தான் வெளியிடும் தகவல்கள், ஆணைக்குழு சாட்சியங்களில் உள்ள மற்றும் ஆணைக்குழு அறிக்கையில் இருந்து மறைக்கப்பட்டவையாகும் என்றும் அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதானி என ஒருவர் பெயரிடப்பட்டிருந்தாலும், அவரை தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கேனும் அழைக்கப்படவில்லை என்றும் ஹரின் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
“குண்டு வெடித்த தினத்தில் ஷானி அபேசேகர என்ற பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியே முதலில் இணைய ஐபி முகவரி மூலம் தாக்குதலுடன் தொடர்புடைய நபரை கைது செய்துள்ளார்.
அதில் புலனாய்வு அதிகாரி ஒருவரும் சிக்கியுள்ளார். இது தொடர்பாக ஆணைக்குழுவில் தகவல்கள் வெளியில் வந்த போதும், அது தொடர்பான அறிக்கையில் வெளிவரவில்லை.
குறித்த அதிகாரியை கைது செய்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் போது, இராணுவ புலனாய்வுப் பிரிவினர் ‘இது எங்களின் விடயம்’ என்று கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளதாக ஆணைக்குழுவில் சாட்சியங்கள் உள்ளன.
ஆனால், இவை எதுவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இல்லை”
என்றும் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.