இணையவழி போலி செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் ஒன்றிணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இணையத்தளங்கள் வாயிலாக பொய்யான தகவல்கள், மோசமான அச்சுறுத்தல்கள் என்பன சமூகங்களைப் பிளவுபடுத்துவதற்கும், வெறுப்புணர்வை பரப்புவதற்கும், ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுவதாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையவழி போலி செய்திகளைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் சட்டங்களை வகுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இணையத்தளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பொய் பிரச்சாரங்களால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து சமூக பாதுகாப்புக்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரஜைகளுக்கும் சிவில் சமூகத்தவர்களுக்கும் சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.