July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் அரச வங்கியொன்றில் 53 ஊழியர்களுக்கு கொரோனா; அன்டிஜன் பரிசோதனைகள் மீண்டும் ஆரம்பம்

கொழும்பு, கோட்டை பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் 53 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அவர்களுடன் தொடர்பை பேணிய 225 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே சமூகத்தில், கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மீண்டும் எழுந்தமானமாக கொரோனா பரிசோதனைகளை சுகாதார தரப்பு ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட எழுந்தமானமான பரிசோதனைகளின் போது 18 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தொற்று நோய் தடுப்பு விசேட நிபுணர் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.

இதனிடையே குருநாகல் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

பிலியந்தல பகுதியில் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட  130 பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது 31 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பண்டிகை காலத்தை தொடர்ந்து இலங்கையில் கொரோனா 3 வது அலை உருவாகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இன்றையதினம் (செவ்வாய்க்கிழமை) 604 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 97,105 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் தொற்றுக்குள்ளான 3,111 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனா தொற்று காரணமாக இதுவரை 620 பேர் உயிரிழந்துள்ளனர்.