July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“அனைத்து மே தின பேரணிகளையும் நிறுத்துங்கள்”; பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் கோரிக்கை

இலங்கையில் கொவிட் வைரஸின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் இம்முறை மே தின பேரணிகளை நடத்த வேண்டாம் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் அரசியல் கட்சிகள் மற்றும் நிபுணர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பின்றி நடந்து கொண்டதால், எதிர்வரும் நாட்களில் கொவிட் வைரஸ் அதிகளவில் பரவும் ஆபத்து இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த நேரத்தில், நாட்டில் கொவிட் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவற்கான அறிகுறிகள் எங்களுக்கு காட்டப்பட்டுள்ளதால், எம்மால் எந்தவொரு ஆபத்தான விடயங்களையும் எடுக்க முடியாது.

எனவே, இம்முறை மே தினக் கூட்டங்களை நடத்தினால் இந்த நிலைமை மிக  மோசமாகும் என்பதால் எந்தவொரு பேரணிகளையோ, கூட்டங்களையோ நடத்த வேண்டாம் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இதற்கிடையில், கொரோனா வைரஸின் பரவலைப் பொறுத்தவரை இலங்கை மோசமான ஒரு கட்டத்தில் இருக்கிறது.

புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பின்றி நடந்து கொண்டதால், கொவிட் பரவல் எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கக்கூடும் எனவும் உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.

அதேபோல, பண்டிகை காலங்களில் மக்களின் மோசமான நடத்தையின் விளைவு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தெரியவரும். இது மிகவும் ஆபத்தானது. எனவே, கொவிட் வைரஸின் மூன்றாவது அலை உருவாவதை முறையாக கையாளாவிட்டால், நாட்டில் நிச்சயம் கொரோனாவின் மூன்றாவது அலை உருவாவதை தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.