July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரிசி மாபியாவை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதியின் கொள்கை தடையாக உள்ளது’

Rice Common Image

நாட்டில் அரிசி மாபியாவை கட்டுப்படுத்த வேண்டுமாயின் வெளிநாட்டில் இருந்து குறைந்த விலையில் அரிசியை இறக்குமதி செய்வதே ஒரே வழிமுறையாகும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்த விடயத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இடமளிக்க மறுக்கின்றார் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹெஷா விதானகே அரிசி மாபியா குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் பந்துல இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாட்டில் அரிசி மாபியாவை கட்டுப்படுத்த வேண்டுமாயின் முன்னைய அரசாங்கம் செய்ததை போல் வெளிநாட்டில் இருந்து குறைந்த விலைக்கு அரிசியை இறக்குமதி செய்து சந்தைப்படுத்த வேண்டும். இதனால் எந்தவொரு மாபியாவையும் கட்டுப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரிசி மாபியாவை கட்டுப்படுத்த முடிந்தாலும் இறக்குமதி செய்யும் அரிசி மூலமாக கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2015 ஆம் ஆண்டில் அமைச்சர்கள் ஒரு சிலர் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல், எம்மால் மாபியாவை கட்டுப்படுத்தும் கொள்கையை முன்னெடுக்க முடிந்த போதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கையில் இருந்து மாறுபட மறுக்கின்றதுடன் அரிசியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவும் அவர் இடமளிக்க மறுப்பதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி இறக்குமதிக்கு இடமளிப்பாராயின் நாட்டில் அரிசி விலையை இலகுவாக கட்டுப்படுத்த முடியும்.

எனினும் எதிர்காலத்தில் விலையை நிர்ணயம் செய்யும் விதத்தில் அரிசி களஞ்சியப்படுத்தல் வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்குவதும், சதொச மூலமாக பகிர்ந்தளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.