
இலங்கையில் புதிய அரசாங்கம் கொண்டுவரவுள்ள 20-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கான வரைவில் 4 சரத்துக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என்று நாட்டின் உச்ச நீதிமன்றம் அரசின் மூத்த தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.
அவ்வாறே, வரைவில் உள்ள ஏனைய சரத்துகளை மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
20-ஆவது திருத்த வரைவு அரசியலமைப்பை மீறுவதாக சுட்டிக்காட்டி சிலர் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு மனுக்கள் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகி இருந்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள 1972-ஆம் ஆண்டின் 2 ஆவது குடியரசு அரசியல் யாப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை புதிய சட்டமூலம் மீறுவதாகவும், ஆதலால் அதனை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் மூத்த சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார்.
இருந்த போதிலும், அரசியலமைப்புச் சட்டத்தின் சில உறுப்புரைகளை மீறுவதாக இருந்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் ஏனைய உறுப்புரைகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு ஆதரவு மட்டுமே போதும் என்றும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
“20-ஆவது திருத்த உத்தேச சட்டமூலத்தின்படி ஒரு வருடத்துக்கு பின்னர் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாம் என்று முன்மொழியப்பட்டிருந்தாலும் நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆட்சிக் காலத்தின் அரைவாசிக் காலத்தின் பின்னரே, அதாவது இரண்டரை வருடங்களின் பின்னரே, கலைக்கமுடியும். அதற்கு முன்னர் கலைப்பதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என்றார் சுமந்திரன்.
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் 20-ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் ஆளும் கட்சியில் இருப்பவர்களூம் புதிய திருத்தத்திற்கு துணை போகக்கூடாது என்றும் சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.
“அரசாங்கத்தோடு இணைந்து சலுகைகள், பதவிகளைப் பெற்றுவிடலாம் என்ற நப்பாசையில் 20-ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு துணைபோகக்கூடாது” என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.