அடுத்த மூன்று வாரங்கள் தீர்மானமிக்கது என்பதால் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வேலைக்கு வருபவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதன்படி, முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை பேணுவது, பணியிடங்களிலும், பொது இடங்களிலும் முறையான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த வாரத்தில் பெரும்பான்மையான மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களின் படி நடந்துகொள்வதை நாங்கள் அவதானித்தோம். ஆனால். இவற்றை பின்பற்றாத ஒரு சிறிய குழு இருக்கலாம். கொரோனாவின் இரண்டாவது அலை ஒருவரிடமிருந்து பரவி நாடு முழுவதும் 90,000 க்கும் அதிகமானோரை பாதிப்புக்குள்ளாக்கியது.
எங்களுக்கு அத்தகைய அனுபவம் இருந்தது. மற்ற நாடுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்போது இந்த நாட்டு மக்களை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கிறோம்.
புத்தாண்டின் போது, நாங்கள் பல கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. ஆனால், சில தடைகள் விதிக்கப்பட்டன. ஏனெனில் இது அவசியமானது. சிலர் அவற்றைப் பொருட்படுத்தாமல் சுதந்திரத்தை அனுபவிக்க முயன்றனர். நோய் பரவுவதைத் தடுக்க பொது ஒத்துழைப்பு முக்கியமானது என்று அவர் கூறினார்.
இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டில் 357 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்ததாகவும், இதில் 70 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.