
தமிழ்த் தேசிய உணர்வாளர்களை கட்டுப்படுத்துகிறோம் என்பதை சிங்கள மக்களுக்கு காண்பிப்பதற்காகவே வடக்கில் கைது நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வட பகுதியில் இடம்பெற்றுவரும் கைதுகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, எம்.கே. சிவாஜிலிங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிலங்கை மக்களை சமாளிப்பதற்காக ‘வடக்கில் மீண்டும் புலி உருவாகிறது’ என காட்டுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோட்டாபய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆக முன்னரே சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாகவும் அவ்வாறான எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக வட பகுதியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த செயற்பாட்டை நாங்கள் அனுமதிக்க முடியாது.
சிங்கள மக்கள் அரசாங்கத்தை எதிர்க்கிறார்கள் என்றால், அது அவர்களுடைய உரிமை. அந்த எதிர்ப்புக்குரிய காரணத்தைக் கண்டறிந்து, அரசாங்கம் சரிசெய்ய முன்வர வேண்டும்.
அதைவிடுத்து, வடக்கில் ஒரு புலிப் பூச்சாண்டியை காட்டி, தமிழ் இளைஞர்- யுவதிகளைக் கைது செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்”
என்றும் சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, மூன்று மாதத்திற்கு மேலாக தடுத்து வைத்து விசாரிப்பதால், அவர்களது வாழ்வாதாரம், குடும்ப நிலைமை பாதிப்படைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.