தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பொறுப்புகளை தீர்மானிக்கும் நோக்கோடு இன்று கூடிய நாடாளுமன்றக் குழுக் கூட்டம் குழப்பத்தில் முடிவடைந்துள்ளது.
கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இன்றைய கூட்டத்தில், முதலில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, இரா.சம்பந்தன் மீண்டும் அந்தப் பொறுப்புக்கு ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்து, கூட்டமைப்பின் பேச்சாளர் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போதைய பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன், தான் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் பேச்சாளர் பொறுப்பை வகித்துவிட்ட படியால், குறித்த பதவிக்கு சி. சிறிதரனின் பெயரை முன்மொழிவதாகக் கூறினார். அதை சார்ள்ஸ் நிர்மலநாதன் வழிமொழிந்தார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த எஸ்.வினோ நோகராதலிங்கம், “பேச்சாளர் பதவியை டெலோவுக்கு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஆனால் அந்தக் கோரிக்கையை தமிழரசுக் கட்சி எம்.பி.க்கள் நிராகரித்துவிட்டனர்.
“நாடாளுமன்ற ரீதியிலான பதவிகளில் ஒன்றான குழுக்களின் பிரதித் தலைவர் பதவி கடந்த ஆட்சியில் தனித்து டெலோவிடமே வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனைப் பங்கிட எவரும் கோரவில்லை” என்ற கருத்து தமிழரசுக் கட்சி எம்.பிக்களால் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சமரசத்தை ஏற்படுத்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. அவர் இந்தக் கூட்டத்தை காலவரையின்றி ஒத்திவைத்தார்.
இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்றிரவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.