சமூக ஊடகங்கள் மற்றும் இணையத் தளங்களில் போலி செய்திகளை பரப்புவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டங்களை வகுப்பதற்கான விவாதங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சிங்கப்பூர் போன்ற பிற நாடுகளிலும் போலி செய்திகளுக்கு எதிராக இதுபோன்ற சட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு குறித்த பொய்யான செய்திகளை பரப்பி பொதுமக்களை தூண்டிவிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளைத் தொடர அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் போலி செய்திகளை பரப்புபவர்கள் பொய்யான சுயவிவரங்கள் கொண்டுள்ளதால் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அலி சப்ரி குறிப்பிட்டார்.
பேச்சு சுதந்திரம், தேசிய பாதுகாப்பு, நல்லிணக்கம், அபிவிருத்தி குறித்த தவறான தகவல், நாட்டின் நற்பெயர், தனியுரிமை மற்றும் அவதூறு ஆகியவற்றிற்கு உட்பட்டது.எனவே இது தொடர்பாக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான தேவை உள்ளதாகவும் அதற்கான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.