November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொழும்பு துறைமுக நகரத்தின் முழு உரிமையும் இலங்கைக்கே சொந்தமானது; நீதி அமைச்சர் அலி சப்ரி

கொழும்பு துறைமுக நகரத்தின் முழு உரிமையும் இலங்கைக்கு மாத்திரம் தான் சொந்தமானது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், துறைமுக நகரத்தின் ஒரு பகுதி பிறிதொரு சாராருக்கு மாற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

துறைமுக நகர பொருளாதார ஆணையத்தின் சட்டபூர்வ நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதி அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

உலகில் முதலீட்டாளர்கள் பார்க்கும் இரண்டு குறியீடுகள் உள்ளன.இதில் வியாபாரம் செய்வதற்கு சிறந்த நாடுகள் இருக்கும் இடத்தில் நாம் இருப்பது 99 ஆவது இடத்திலாகும். அதாவது நாம் மற்ற 98 நாடுகளை கடந்து வர வேண்டும்.

மேலும், ஒரு ஒப்பந்தம் தொடர்பாக சிக்கல் ஏற்படும் போது, நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்லும் போது 165 ஆவது இடத்தில் இருக்கிறோம். எனவே, முதலீட்டாளரை பெற ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இந்த முதலீட்டு மண்டலத்தின் மொத்த பரப்பளவு 269 ஹெக்டேயர் ஆகும். பொது வசதிகளுக்காக 91 ஹெக்டேயர். அவற்றைக் கொடுக்க முடியாது. திட்ட நிறுவனத்திற்கு 116 ஹெக்டேயர் (43 சதவீதம்).

இதை உருவாக்க 2013 ஆம் ஆண்டில் ரூ.1.4 பில்லியனை அவர்கள் செலவிட்டார்கள்.நம்மிடம் இன்னும் கடலின் ஒரு பகுதி மட்டுமே உள்ளது. 23 சதவீதம் அரசின் பங்குகள்.ஆனால் இது 100 சதவீதம் அரசாங்கத்திற்கு சொந்தமானது, அரசாங்கமே உரிமையாளர். வேறொருவருக்கு பாதி நிலம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்வது முற்றிலும் தவறானது என தெரிவித்தார்.

இதனிடையே, துறைமுக நகரத்தின் நடவடிக்கைகளை நிர்வகிக்கவும், ஒழுங்குபடுத்தவும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. எனவே, கொழும்பு துறைமுக நகரத்தில் வியாபாரம் அல்லது சேவைகளை வழங்குவதற்கான உரிமங்கள் அதன் ஊடாகத்தான் வழங்கப்படுகின்றது.

துறைமுக நகரத்தில் அதிநவீன அலுவலக வளாகங்கள், அதிநவீன சுகாதார பராமரிப்பு நிலையங்கள், கல்விச் சேவைகள், படகு சேவைகள், சிறப்பு அங்காடிகள், ஹோட்டல்கள் மற்றும் பொழுதுபோக்கு  என பலதரப்பட்ட வசதிகள் உள்ளன.

இந்த திட்டத்தின் ஊடாக 130,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.5 சதவீத பங்களிப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு எதிராகவும், அரசாங்கத்தின் திட்டங்களிற்கு எதிராகவும் சில குழுக்கள் தவறான தகவல்களை பரப்புகின்றன. இந்த தவறான தகவல்கள் பொதுமக்களை பிழையாக வழிநடத்தக்கூடும்.

இந்த குழுக்களை அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கான சட்டசீர்திருத்தங்களை உருவாக்கி வருவதாகவும் நீதியமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இவ்வாறான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அவர், இந்த சட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.இலங்கையின் சூழமைவிற்கு பொருத்தமான சட்டமுறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.