சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வருகிறார்.
கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், சீனாவின் உயர்மட்ட அதிகாரியொருவர் இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.
இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது, இரு தரப்பு இராஜதந்திர நிகழ்ச்சி நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்களை இவர் சந்திக்க உள்ளார்.
அத்தோடு ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுக நகர் உட்பட முக்கிய சீன திட்டங்களையும் ஜெனரல் வெய் ஃபெங் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களை பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்காவின் தலைமையில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கி ‘குவாட்’அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
‘குவாட்’ காரணமாக இந்து மா சமுத்திரத்தில் தமக்கு ஏற்பட கூடிய சவால்களை எதிர்கொள்ள இலங்கை மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுடன் இராணுவ உறவுகளை சீனா வளர்த்து வருகிறது.
சீனா, பாகிஸ்தானுடனும் மிக பலமான இராணுவ உறவை பேணி வரும் நிலையில் இலங்கையில் முன்னெடுக்கவுள்ள பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றது.
இதனிடையே சீனாவும் இலங்கையும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான முன்மொழிவு, கடந்த 2015க்கு முன்னர் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் விவாதிக்கப்பட்டது. எனினும் அதனைத் தொடர்ந்து வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டன.
இந்த பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம் இலங்கை ஏற்றுமதியை, சீன சந்தைக்கு அனுப்புவதாகும் என நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.