20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாவமன்னிப்பு பெற சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இன்றைய அரசாங்கம், பாராளுமன்றத்தில் இரண்டு சட்ட மூல மசோதாக்களை கொண்டு வந்து நாட்டையும், இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களையும் ஆபத்தில் போட திட்டமிடுகின்றது.
ஒன்று, நமது தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை அழித்து, ஒழிக்கும் உத்தேச இரகசிய திட்டமிடலும், முயற்சியும் ஆகும்.
அதாவது, இந்நாட்டில் இன்றுள்ள தேர்தல் முறை சட்டங்களை திருத்தியமைக்க, இவர்கள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கொண்டுவர திட்டமிடும் சட்டமாகும்.
அத்துடன் இந்த நாட்டில் நிலவும் சட்டங்களிலிருந்து விலக்களித்து, சீன நாட்டுக்கு விசேட சலுகைகளை அளித்து, கொழும்பு தலைநகரை ஒட்டி, மேற்கு கரையில் அமைகின்ற, தனியொரு நிர்வாகம் கொண்ட ‘துறைமுக நகர்’ ஆகும்.
அரசின் உள்ளே இருக்கும் தமிழ், முஸ்லிம் பங்காளி கட்சியினரும், 20ம் திருத்தத்துக்கு ஆதரவாக அரசு பக்கம் தாவிய எம்.பி.க்களும் அமைதி காக்கின்றனர். இது இன்று தமிழ் பேசும் மக்களின் சாபக்கேடாக இருக்கிறது.
அதேபோல், அடுத்த தேசிய ஆபத்தான, சீன நாட்டுக்கு விசேட சலுகைகளை அளித்து, இந்நாட்டில் நிலவும் சட்டங்களிலிருந்து விலக்களித்து, தனியொரு நிர்வாகம் கொண்ட ‘துறைமுக நகருக்கான விசேட வர்த்தமானி பிரகடனம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் உறுப்பினர்கள் ஒன்று கூடி, சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை ஒழிக்கும் தேர்தல் முறைக்கு ஆதரவாக நாம் வாக்களிக்க மாட்டோம் என்று அரசுக்கு உறுதியாக இடித்துரைக்க வேண்டும் எனவும் மனோ கணேசன் அந்த பதிவில் பதிவிட்டுள்ளார்.