November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கத் திட்டம்!

இலங்கையில் சமையல் எரிவாயு விலை அடுத்த வாரம் முதல் அதிரிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி 12.5 கிலோ நிறையுடைய எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை 100 முதல் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக உள்ளூர் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 700 ரூபாவிலும், லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 650 ரூபாவிலும் அதிகரிக்க வேண்டுமென எரிவாயு நிறுவனங்கள்  அந்த நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் அனுமதி கோரியுள்ளன.

எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால், தமது நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாக அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆனபோதும் நுகர்வோர் விவகார அதிகார சபை விலை அதிகரிப்புக்கு இதுவரையில் அனுமதி வழங்கவில்லை.

சமையல் எரிவாயுவில் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை என கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக சமையல் எரிவாயு நிறுவனங்கள் நிதி அமைச்சு, வணிக அமைச்சு மற்றும் நுகர்வோர் அதிகார சபை ஆகியவற்றுக்கு தெரியப்படுத்தியுள்ளதால் இதுதொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த வாரம் முதல் எரிவாயு விலை 100 முதல் 200 ரூபாவினால் அதிகரிக்கப்படலாம் என்று கொழும்பு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் முன்னணி சமையல் எரிவாயு நிறுவனங்களான லாஃப் மற்றும் ஷெல் ஆகிய நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர் ஒன்றை 1501 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.