அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டமொன்று நாளை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் அந்தக் கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், கூட்டுக் கட்சிகளுக்கிடையே நிலவும் முரண்பாடுகள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
மேலும் இந்தக் கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் குறித்து அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கிடையில் பொது இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
குறிப்பாக, மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் சில சரத்துகள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒரு நிலைப்பாட்டினையும், ஏனைய கட்சிகள் வேறு நிலைப்பாட்டினையும் கொண்டுள்ள காரணத்தினால் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம், மே தின கூட்டம் என்பன குறித்தும் நாளை இடம்பெறவுள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.