January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

’10 தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டணி’: தொடர்ந்தும் பேசுவோம் என்கிறார் மாவை

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அண்மையில் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் வடக்கு-கிழக்கு தழுவிய ஹர்த்தாலையும் நடத்திய சக தமிழ்க் கட்சிகளுடன் தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று புதன்கிழமை பகல் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இரவு இடம்பெற்றது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பங்காளிக் கட்சிகள் சார்பில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மூத்த உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

கூட்டமைப்புக்குள் விவாதம்

‘திலீபன் நினைவேந்தல்’ மீதான தடையைத் தொடர்ந்து உருவான ’10 தமிழ்க் கட்சிகளின் கூட்டணி’ தொடர்பில் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த 10-கட்சிக் கூட்டணியின் கூட்டங்கள்’, அவற்றில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் அவை தொடர்பான நிலைப்பாடுகள் பற்றி டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கேள்விகளை அடுக்கினார்.

இதன்போது கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும், செல்வம் அடைக்கலநாதனின் கருத்தை ஆமோதித்துப் பேசினார்.

இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, “தமிழ் மக்களுக்கு எதிரான அரசின்  செயற்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்காக உருவான அமைப்பே 10 தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டணி என்று” கூறினார்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இது தொடர்பில் தமது நிலைப்பாட்டைக் கூறியபோது, தமிழ் மக்களின் பொது விடயங்களுக்காக ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதில் தவறு கிடையாது என்று தெரிவித்தார்.

ஆனால் கட்சி ரீதியான – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரீதியான – முடிவுகளுக்கு கூட்டமைப்பின் தலைமையுடன் பேசிய பின்னரே அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தன் கோரியுள்ளார்.

“இந்தக் கோரிக்கையை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டோம். தமிழ் மக்களின் நலன் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் நாம் தொடர்ந்து பேசுவோம்” என்று இன்றைய கூட்டம் தொடர்பில் ‘தமிழ் அவனியிடம்’ பேசிய மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

“இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருமித்த பயணமும் மிகவும் அவசியமாகும்” என்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மேலும் கூறினார்.