July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் 252 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் முறையாக வரிச் செலுத்தத் தவறியுள்ளன’

இலங்கையில் உள்ள 252 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் கடந்த வருடங்களில் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை  முறையாக செலுத்தத் தவறியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆய்வு அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன்படி 2020 ஆம் ஆண்டின் இறுதி வரையில் குறித்த நிறுவனங்கள் மொத்தமாக 697 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு வரியாக செலுத்த வேண்டியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

வரி புள்ளிவிபரங்கள் மற்றும் வரி செலுத்துவோரின் அபராதம் குறித்து 2021 மார்ச் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தின் பொது கணக்குகள் பற்றிய குழுவிற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்னேற்ற மறுஆய்வு அறிக்கையின் ஊடாக குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016 ஆம் ஆண்டில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கணினி மயமாக்கப்பட்ட  புதிய முறையில் வரியை வசூலிக்கும் நடவடிக்கையை அறிமுகப்படுத்தியது.

அதற்கு முன்னர் ஊழியர்களின் தலையீட்டுடன் ஆவணப்படுத்தப்பட்ட  பெயரில் மரபு ரீதியிலான வரி வசூல் முறையே காணப்பட்டது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிக்கையின் படி, 2015 டிசம்பர் 31 ஆம் திகதி வரை செயல்பட்டு வந்த  மரபு ரீதியிலான வரி வசூல் முறைக்கு அமைய 2020 டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய மொத்த வரி நிலுவை 291 பில்லியன் ரூபாவாகும்.

அத்துடன், 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் 2016 நடைமுறைப்படுத்தப்படும் கணனி மயப்படுத்தப்பட்ட வரி வசூல் முறையின் படி, 2020 டிசம்பர் 31 ஆம் திகதி வரை அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய மொத்த வரி நிலுவை 406 பில்லியன் ரூபாவாகும்.

இதன்படி குறிப்பிட்ட நிறுவனங்களால் வருமான வரி, வட் வரி, தேசிய கட்டட வரி, வருவாய் வரி, பொருளாதார சேவை கட்டணம் மற்றும் பல வரிகள் இதுவரை செலுத்தப்படவில்லை.

இதன்படி, முன்னணி பொது மற்றும் தனியார் காப்புறுதி நிறுவனங்கள், முக்கிய அரச வங்கிகள், பொது மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள், கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள், மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள், சுற்றுலாப் பயண நிறுவனங்கள், ஆடை நிறுவனங்கள் மற்றும் குளிர்பான நிறுவனங்கள் ஆகியவை இவ்வாறு வரிகளைத் தவிர்த்த நிறுவனங்களில் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.