கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு விரைவில் கூடித் தீர்மானம் எடுக்கும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
‘துறைமுக நகர பொருளாதார வலயம்’ ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவும் விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில் அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமரவீர இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சுதந்திரக் கட்சி எடுக்கும் தீர்மானம் நாட்டுக்கு சார்பானதாகவே இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சிகள் கொழும்பு துறைமுக நகரம் தனியான இராணுவம், பொலிஸ் பிரிவுகளை கொண்டிருக்கும் என்று குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், அவ்வாறான நிலைமைக்கு சுதந்திரக் கட்சி இடமளிக்காது என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிபப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதியும், பிரதமரும் நாட்டின் சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆட்சியை முன்னெடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தம்மிடம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.