இலங்கையில் ஏப்ரல் 13 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த விபத்துக்களில் 669 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த காலப் பகுதியில் சுமார் 399 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 5 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணித்த 2,242 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 12 பேருந்துகள், 38 லொரிகள், 128 கார்கள், 553 முச்சக்கர வண்டிகள், 1429 மோட்டார் சைக்கிள்கள், 22 வண்டிகள் மற்றும் 22 ஏனைய வாகனங்கள் ஆகியன அடங்குவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மது போதையில் வாகனம் செலுத்தி 1834 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வார இறுதி விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறையை நிறைவு செய்து விட்டு கொழும்பு திரும்புவோர் மற்றும் தொழிலுக்காக செல்வதற்காக இன்று கொழும்புக்கு வருகை தருவோர்கள் வாகனத்தை மிக அவதானமாக வீதி ஒழுங்கு முறைக்கு அமைவாகச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.