July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மக்களுக்காக குரல் கொடுக்கின்றவர்கள் எம்மிடையே இருக்க வேண்டும்”: மன்னார் ஆயர்

மக்களினுடைய பிரச்சினைகளை அறிந்து அவர்களுக்காக குரல் கொடுக்கின்றவர்கள் கட்டாயமாக நமது சமூகத்திற்குள் இருக்க வேண்டும் என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

துணிச்சல் மிக்க பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்ற மன்னாரை சேர்ந்த சட்டத்தரணி ரனித்தா ஞானராஜாவை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று மாலை மன்னார் நகர மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகையை நினைவுப்படுத்தி கருத்து தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளோர் என பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை மக்களுக்காக குரல் கொடுத்தார். இப்போது அவரை நாங்கள் இழந்துவிட்டோம் என்று இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டனை குறிப்பிட்டார்.

இந்நிலையில் மக்கள் பிரச்சினைகளை அறிந்து அவர்களுக்காக குரல் கொடுக்கின்றவர்கள் கட்டாயமாக இந்த சமூகத்தில் தேவைப்படுகின்றார்கள் என்று ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இந்த இளம் வயதில் அவருடைய திறமையால் இந்த மக்களுக்காக குரல் கொடுத்து துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார். இவ்வாறாக சமூகத்தில் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.