July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் 19 போர்வையில் மோசடிகள் இடம்பெறுகின்றது – மரிக்கார் எம்.பி குற்றச்சாட்டு!

இலங்கையில் கொவிட் 19 என்ற பெயரில் பாரியளவிலான ஊழல், மோசடிகள் இடம்பெறுவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

அனைத்து தொழிற்சாலை ஊழியர்களையும் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு இலங்கை முதலீட்டு சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் பரிசோதனைகளை செய்வதற்காக தனியார் வைத்தியசாலைகள் சிலவற்றின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி பரிசோதனைக்காக வாரமொன்றுக்கு 325 ரூபாய் செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பரிசோதனை நடவடிக்கைகள் இலாப நோக்கத்தை கொண்டதாக அமையுமென குறிப்பிட்ட அவர், அதில் ஊழல் மோசடிகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் இது வரையில் 1030 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழிற்சாலைகளிலும் பரிசோதனைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் 10 இலட்சம் பேர் வரையிலானோர் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.