தற்போதைய அரசாங்கத்தில் ஊழலும், இலஞ்சமும் நிறைந்து போயுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இடம்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, ‘தற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் சிக்கியுள்ளது. எல்லாவற்றிலும் ஊழலும், இலஞ்சமும் நிறைந்துள்ளது.
அதேபோல் எல்லாவற்றிலும் கலப்படம் உள்ளது. தேங்காய் எண்ணெய், சீனி, பருப்பில் என அனைத்திலும் ஊழல் கலந்துள்ளது. தற்போது எமது கடல் வளத்தை மூடி சீனாவுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், முன்னர் ஆட்சி பீடம் ஏறும் தரப்பினரை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் காணப்பட்டனர். ஆனால் இன்று சிறுபான்மையினர் நசுக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, இன்றும் 1000 ரூபா சம்பளத்தை முழுமையாக சிலர் பெற்றுக்கொள்ளவில்லை. முக்கியமாக அரசாங்க தோட்டங்களில் 1000 ரூபா அதிகரிப்பு கொடுக்கப்படவில்லை. இன்று எல்லா சலுகைகளும் இல்லாது போயுள்ளது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.