January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு அஸ்கிரிய பீடம் முடிவு

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வகிப்பதற்கான ஆணைக்குழு சட்டமூலம் நாட்டின் சட்டத்திலும் அதிகாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அறிய முடிவதாக தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடத்தின் தலைமை செயலாளர் மெதகம தம்மானந்த தேரர், இது குறித்து ஜனாதிபதியுடன் பேசி ஒரு தெளிவினை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

எமது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எதாவது ஒரு காரணி கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தில் உள்ளடக்கப்படுமானால் அதனை எதிர்ப்பதே எமது பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டின் நிலத்தை குத்தகைக்கு வழங்கவோ அல்லது வெளிநாடுகளுக்கு விற்கவோ அரசாங்கத்திற்கு  உரிமை இல்லை என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

சில அரசியல் கட்சிகள் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் நாட்டை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“நாட்டை பிளவுபடுத்துவதற்கான 30 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வந்தபோதும் இப்போது நாம் மற்றொரு சிக்கலை எதிர்கொள்கிறோம்.துறைமுக நகரம் என்ற பெயரில் நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றும் முயற்சியாகவே நவீன சீன காலனியை நாங்கள் பார்க்கிறோம்” எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டார்.

புதிய சீன காலனி புறக்கணிக்கப்பட வேண்டும். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஆட்சியில் இருப்பவர்கள் நாட்டின் நிலத்தை   குத்தகைக்கு வழங்கவோ அல்லது விற்பனை செய்வதற்கோ எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.