வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக தாம் கவனம் செலுத்தி வருவதாக தொற்று நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர், விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளான அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே, இதுகுறித்து கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்தும் விடயம் தொடர்பான நடைமுறைகளும் இறுக்கமாகக் கடைபிடிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் கொவிட்- 19 தொற்றின் மூன்றாம் நான்காம் அலைகள் ஏற்பட்டுள்ள நிலையில், சில நாடுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமான போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2021 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களில் 1593 பேரும் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 500 க்கு அதிகமானவர்களும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையைக் கருத்திற்கொண்டு, பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.