கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக அரசாங்கம் முன்வைத்துள்ள சட்டமூலமானது அரசியல் யாப்புக்கு முரணானது அல்ல என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தரவுக்கு அறிவித்துள்ளதாக “டெய்லி நியூஸ்” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டமா அதிபரின் அறிவித்தலை மேற்கொள்காட்டி டெய்லி நியூஸ் பத்திரிகை, “துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது அரசியல் யாப்புக்கு முரணானவை அல்ல என்பதை நான் உங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இந்த மசோதா அரசியலமைப்பின் 13 வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் விதிக்கப்பட்ட எந்தவொரு தடைக்கும் உட்பட்டது அல்ல, அவை பாராளுமன்றத்தால் இயற்றப்படலாம்” என தெரிவித்துள்ளது.
துறைமுக நகர சட்டமூலம் தொடர்பாக அறிவுறுத்தும் வகையில் கலாநிதி பீ.பி ஜயசுந்தர சட்டமா அதிபருக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே சட்டமா அதிபர் குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
எனினும் கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வகிப்பதற்கான ஆணைக்குழு சட்டமூலம் வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை சேமிக்காத இலங்கையர்களுக்கு சம வாய்ப்பை மறுப்பதாகவும் போர்ட் சிட்டி ஆணைக்குழுவுக்கு அதிகமான அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.