அரசாங்கத்தின் மீதான சிங்கள மக்களின் எதிர்ப்பினை சமாளிக்கவே வடக்கில் திடீர் கைதுகள் இடம்பெறுவதாக சாள்ஸ் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.
வட பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இடம்பெற்று வரும் கைதுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறிய போதிலும், தற்போது சிங்கள மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களும் பௌத்த தேரர்களும் அரசாங்கத்துக்கு எதிராக முழுமையான போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் சாள்ஸ் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டின் முக்கிய ஸ்தானங்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதன் காரணமாக சிங்கள மக்களும் பௌத்த துறவிகளும் எதிர்ப்பினை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அரசாங்கம் சிங்கள மக்களின் எதிர்ப்பினை சமாளிப்பதற்காக ‘தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க முயற்சி’ எனக் காரணம் காட்டி வடக்கு இளைஞர், யுவதிகளை திட்டமிட்டு கைது செய்து வருவதாகவும் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
“வடக்கு, கிழக்கில் புலிகள் மீள உருவாகிறார்கள். கோட்டாபய அரசினால் மாத்திரமே இந்த விடுதலைப்புலிகளின் உருவாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்” என்ற செய்தியினை தென்னிலங்கை மக்களுக்கு தெரிவித்து, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையினை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.