November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘போர்ட் சிட்டி சட்டமூலம் இலங்கையர்களுக்கான சம வாய்ப்பை மறுக்கிறது’: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வகிப்பதற்கான ஆணைக்குழு சட்டமூலம் வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை சேமிக்காத இலங்கையர்களுக்கு சம வாய்ப்பை மறுக்கின்றதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக அரசாங்கம் முன்வைத்துள்ள சட்டமூலத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

குறித்த சட்டமூலம் போர்ட் சிட்டி ஆணைக்குழுவுக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

போர்ட் சிட்டி ஆணைக்குழுவுக்கு வெளிநாட்டவர்கள் நியமிக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதால், மக்களின் தலைவிதி வெளிநாட்டவர்களால் தீர்மானிக்கப்படும் நிலை உருவாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சட்ட செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜேகுணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை நன்மை அடையக்கூடிய திட்டமாக போர்ட் சிட்டி கருதப்பட்டாலும், இந்த சட்டமூலம் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.