இலங்கையில் தடை செய்யப்பட்ட கடும்போக்கு இஸ்லாமியவாத அமைப்புகளின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தலைவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் இதுதொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தாம் 11 அமைப்புகளை முழுமையாக தடை செய்ததாகவும், விசாரணைகளில் வங்கிக் கணக்குகள், சொத்து விபரங்களைப் பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட அமைப்புகள் அல்லது அமைப்புகளின் உறுப்பினர்கள் அடிப்படைவாத செயற்பாடுகளில் தொடர்புபட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.