January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“கடைசி இரண்டு வாரங்கள் யுத்த நகர்வுகளை சீனாவில் இருந்தே முன்னெடுத்தேன்”: பொன்சேகா

இலங்கையில் யுத்தம் முடிவுக்குவர இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் சீனா சென்றது உண்மையே என்றும், அங்கிருந்தபடியே யுத்த நகர்வுகளை முன்னெடுத்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சர்வதேச உடன்படிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, யுத்தம் முடிவுக்கு வரும் வேளையில் பொன்சேகா சீனாவிலேயே இருந்தார் என்று தெரிவித்திருந்தார்.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய சரத் பொன்சேகா, யுத்தம் முடிவுக்கு வர இரண்டு வாரங்களே இருந்தபோது கீழ்மட்ட அதிகாரிகளின் பணிகள் மட்டுமே அவசியம் என்ற நிலைப்பாடு இருந்ததாகவும் கூறினார்.

அப்போது இராணுவத்திற்கு யுத்த தாங்கியொன்று தேவைப்பட்டதாகவும், அதனைப் பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டதால், அதனைப் பெறுவதற்காக தாம் நேரடியாகவே சீனாவுக்கு செல்ல நேரிட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா கூறினார்.

“குறித்த தினத்திற்குள் வராவிட்டால் யுத்த தாங்கிகள் எமக்கு வழங்கப்படாது என கூறினார்கள். அதற்காகவே நான் அங்கு ( சீனா ) சென்றேன்” என்றார் பொன்சேகா.

“ரணில், மைத்திரி போன்றவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் எம்மால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியாது, அதனை நான் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளேன்” என்றும் கூறினார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.