May 29, 2025 16:19:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நாங்கள் அடக்குமுறை, அச்சுறுத்தலுக்கு பயந்து ஒளிந்தோடும் இனமல்ல”; முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

இறையாண்மைக்கு எதிராக யாராவது அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக செயற்படுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்ல என முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அதேபோல, அடக்குமுறை, அச்சுறுத்தலுக்கு பயந்து ஒளிந்தோடும் இனம் நாங்களல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாட்டினதும், மக்களினதும் இறையாண்மைக்கு எதிராக யாராவது தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, நினைத்த பிரகாரம் சட்ட மூலங்களை ஏற்படுத்த திட்டமிடுவதாக இருந்தால் அதற்கு எதிராக போராடுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

சில சந்தர்ப்பவாத தேரர்கள் பின்வாங்கினாலும் இவ்வாறான அச்சுறுத்தல், அடக்குமுறைகளுக்கு பயந்து, மீகெட்டு வத்தே குணானந்த தேரரின் வம்சத்தில் செயற்படும் எந்தவொரு பிக்குவும் மௌனித்திருக்கப் போவதில்லை. ஒரு சிலர் எம்மை அச்சுறுத்தி, அடக்கி எங்களது வாயை மூடிவிட பார்க்கின்றனர்.

மேலும் மாகாண சபை முறைக்கு நாங்கள் எதிர்ப்பு. யார் எதிர்த்தாலும் எவ்வாறு எதிர்த்தாலும் மாகாண சபை தேர்தலை நடத்தியே ஆகுவோம் என சிலர் தெரிவிக்கின்றனர்.

அப்படியானால் இது தொடர்பாக யார் எதிர்த்தாலும், யார் அச்சுறுத்தினாலும் மாகாண சபை முறைமைக்கு எதிரான எமது போராட்டத்தை எந்த வித்தியாசமும் இன்றி, நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்வோம் என்பதை இவர்களுக்கு தெரிவித்து வைக்க விரும்புகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.