ஜனாதிபதி தன்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மிகவும் இழிவான மற்றும் அச்சுறுத்தும் வகையிலான வசனங்கள் மூலம் திட்டியதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்திற்கான ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் தான் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாகவே ஜனாதிபதி தன்னை திட்டியுள்ளார் என்று விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத்தை சட்டமூலமொன்றின் ஊடாக சீனாவிடம் கையளிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இவ்வாறு செய்வதன் ஊடாக சீனாவுக்கு சொந்தமான தனியான நாடாக அது மாறக் கூடும் என்று விஜயதாச ராஜபக்ஷ நேற்று கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று முற்பகல் தன்னை தொலைபேசியில் அழைத்த ஜனாதிபதி அச்சுறுத்தும் வகையில் மிகவும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியதாக விஜயதாச ராஜபக்ஷ, இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.
”ஜனாதிபதியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தபோது கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் குறித்து விளக்கமளித்து உரையாடவே அவர் அழைப்பதாக நான் நினைத்தேன். ஆனால் அவர் கீழ்த்தரமான வசனங்களை பயன்படுத்தி என்னைக் கடுமையாக அச்சுறுத்தினார். பாராளுமன்ற உறுப்பினரான என்னை அவர் அச்சுறுத்தியமையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.” என்று விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவரது அச்சுறுத்தலால் எங்களுடைய சொந்த வாழ்க்கை, குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் குறித்து பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.