Photo: Faceboo/ nalaka godahewa
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பதற்கான நிலைப்பாடு அரசாங்கத்திடம் இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போது, மீனவர் பிரச்சனை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களை மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகளை நம்பி பொதுமக்களை ஏமாற வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019 நவம்பர் மாதம் இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற நாள் முதல் இதுவரை நாட்டைக் காட்டிக்கொடுக்கின்ற எந்தவொரு செயல்பாட்டையும் ஜனாதிபதி மேற்கொள்ளவில்லை என்றும், இதனால் ஜனாதிபதி மீது பொதுமக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும் என்றும் அவரது ஆட்சி முறை பற்றி நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.