யாழ்ப்பாணம் வடமாராட்சி – கிழக்கு முள்ளிப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
சட்ட விரோத மணல் கடத்தலை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெறும் பகுதியிலிருந்து வந்த வாகனமொன்றை நிறுத்துமாறு அதிரடிப்படையினர் உத்தரவிட்ட நிலையில், அதனையும் மீறி அந்த வாகனம் பயணித்த போது அதிரடிப்படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனபோதும், வாகனம் நிறுத்தப்படாது தொடர்ந்தும் பயணித்துள்ளதாகவும், பின்னர் சூட்டுக் காயங்களுடன் இருவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணை நடத்தப்பட்ட போது, அவர்கள் இருவரும் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துன்னாலையை சேர்ந்த 23 மற்றும் 26 வயதுடைய இருவரே இவ்வாறாக காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் போது இவர்கள் பயணித்த வாகனம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.